
பேரூந்து பயணத்தில் பல மணித்துளிகள் கரைவது கூட தெரியாமல்
சில மழைத்துளிகளில் கரைந்துவிட்டது என் ஆழ்மனம்
யன்னல் ஓரக் கம்பிகளில் மோதிக்கொண்டாலும்
வரிசை மாறாது பயணிக்கும் துளிகளுக்கு
யார் கற்று தந்தது ஒழுக்கத்தை ...
மூடிய யன்னலில் படிந்த பனியை
மெதுவாக துடைத்து சிறு ஓரப் பார்வையால்
ரசிக்க என்ன இல்லை நம்மைச் சுற்றி ....
சின்னஞ் சிட்டுக்கள் மழை அங்கியையும் மீறி
எப்படியாவது நனைந்துவிட வேண்டும் என்று துள்ளித் திரிய
தம்மை பாதுகாத்துகொள்ளும் முயற்சியில் தோல்வி கண்ட
பெரியோர் எப்படியாவது சென்றுவிடவேண்டும் எனும்
எண்ணத்தில் தொடர்கின்றனர்...
இன்று தானோ விளையாட்டு போட்டி என எண்ணுமளவு
வெளியே பல சாகசங்கள் இரசனையின் உச்சியில்
தேங்கி நிற்கும் நீரை கடக்க சிலர் தூரம் பாய்தலில்
இன்னும் சிலர் உயரம் பாய்தலில்
எஞ்சிய பலர் நனையாத இடம் தேடி மரதன் ஓட்டத்தில்
தமக்குள்ளேயே வெற்றி கண்டுகொள்கின்றனர்...
வெய்யிலில் நிழல் தரும் மரங்கள் இன்று தாமும்
மழை கண்ட சந்தோஷத்தில் ஆட்டம் காண்கின்றன
அகங்காரமாய் நிமிர்ந்து நின்ற புற்கள்
மழைத்துளி காரணமாக தலைக்கணம் கூடிப்போய்
தரைநோக்கி கவிழ்கின்றன ....
ரசனைக்கு எல்லை இல்லை
பயணத்தின் முடிவு வரை - ஆகயத்திலிருந்தான
ரகசியத் தூதர்களின் வரவிற்கும் முடிவில்லை ...